search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜுபாய் வாலா"

    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KarnatakaCMRace #FloorTest
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

    கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது எனவே, எடியூரப்பா பதவியேற்றதை தடுக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்த அன்றே இரவில், சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. நள்ளிரவில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, எடியூரப்பா கவர்னரிடம் அளித்த கடித்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்று தள்ளி வைத்தனர்.

    இதனை அடுத்து, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், கர்நாடக பாஜக சார்பில் முகுல் ரோகித்கி, காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜராகினர்.


    வழக்கு விசாரணையின் போது, காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய நிலையில், பாஜகவை ஆளுநர் அழைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மஜதவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோகித்கி பதிலளித்தார்.

    எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா? என நீதிபதிகள் கேட்டனர். காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு இரண்டில் எதாவது ஒன்றுதான் தீர்வு என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் - மஜதவுக்கு முதலில் அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அச்சமின்றி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். ஓட்டெடுப்பு வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால், பாஜக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் கேட்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாஜகவின் கோரிக்கையை நிராகரித்தனர். நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளையே பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவர் தற்காலிக சபாநாயகராக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்காது என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

    ஓட்டெடுப்புக்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவை நியமித்த கர்நாடக கவர்னரின் உத்தரவுக்கும் நீதிபதிகள் தடை போட்டனர். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்த நியமனமும் இருக்க கூடாது. எடியூரப்பா கொள்கை ரீதியிலான எந்த முடிவும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏவை நியமித்த கவர்னரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ், மஜத சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. #KarnatakaCMRace
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ பதவிக்கு வினிஷா நீரோ என்பவரை நியமித்து கவர்னர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மஜக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. எடியூரப்பா அரசு பெரும்பான்மையை இன்னும் நிரூபிக்காத நிலையில், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என அதில் கூறப்பட்டுள்ளது.

    எடியூரப்பா பதவியேற்க தடை கோரிய மனுவுடன், இந்த மனு நாளை சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது. நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்ஏ போப்டே, அசோக் பூஷன் மேற்கண்ட மனுவை விசாரிக்கின்றனர். 
    ×